FARZI: கள்ளப்பணம் பற்றிய நல்ல படம்



Raj & DK இயக்கத்தில் வெளிவந்த The family Man வெப் சீரிஸ் பற்றி ஏற்கனவே உயிர்மையில் எழுதியிருக்கிறேன். திரும்பிப் பார்ப்பதற்குள் Farzi, Guns and Gulaabs, Citadel Honey Bunny என ஏராளமான தொடர்களை எடுத்துவிட்டார்கள்.

இவற்றில் ஃபார்ஸி (Farzi) என்ற வெப் சீரிஸ் 2023 பிப்ரவரியிலேயே வந்துவிட்டது. அமேசான் பிரைமில் வந்த தொடர்களில் அதிகம் பார்வையாளர்களைக் கொண்ட தொடர் இதுதான். எனக்குத் தெரிந்து எல்லோருமே நல்ல ரேட்டிங்ஸைக் கொடுத்திருந்தார்கள். 2023க்கான Filmfare OTT award-ம் வாங்கியிருக்கிறது. ஆனாலும், மிக சமீபத்தில்தான் இந்த வெப் சீரிஸைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் இருக்கும் பல விசயங்கள் ஃபார்ஸி வெப் சீரிஸிலும் இருப்பதைப் பார்க்க முடிந்தது. Encounter, தேசபக்தி, பாகிஸ்தான் என எல்லாவற்றைப் பற்றியும் இரண்டு தொடர்களிலும் ஒரேமாதிரியான பார்வையைத்தான் முன்வைக்கிறார்கள். குறிப்பாக, தி ஃபேமிலி மேனில் வரும் மனோஜ் பாஜ்பாய் கதாபாத்திரத்திற்கும் ஃபார்ஸியில் வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கும் ஏகப் பொருத்தம். இரண்டு கதையிலும் வரும் முக்கிய கதாப்பாத்திரம் நாட்டுக்காக அல்லும்பகலும் உழைக்கும்போது, அவனுடைய மனைவியை இன்னொருவன் கவர்ந்துகொண்டு போய்விடுகிறான் என்பது உள்பட.

ஆனாலும், Raj & DK இன்றைய இந்தியாவின் costly-யான வெப் சீரிஸ் இயக்குநர்கள். மிக அதிகமான பொருள் செலவில் பிரமாண்டமான தொடர்களை எடுக்கிறார்கள். ஃபார்ஸி என்ற இந்தத் தொடருக்காக விஜய் சேதுபதிக்கு 7 கோடி சம்பளம் கொடுத்ததாகக் கூறுகிறார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தவிர, ஷாகித் கபூர், கே.கே.மேனன், ராசி கன்னா என காஸ்ட்லியான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஷாகித் கபூருக்குத் தமிழில் நடிகர் ஜீவா குரல் கொடுத்திருக்கிறார். அலோம் பாலேகர் என்ற நடிகருக்குத் தமிழில் நடிகர் நாசர் குரல் கொடுத்திருக்கிறார்.

எனக்கு, Raj & DK இயக்குநர்களின் திரைக்கதை உட்பொருளில் கொஞ்சம் கருத்து வேறுபாடு இருக்குமே தவிர, அவர்களின் திரைக்கதை எழுத்து மிகவும் பிடிக்கும். கதைக்குத் தேவையான நடிகர்களைக் கொண்டுவந்துவிடுவார்கள். அவர்களிடமிருந்து stellar performance-ம் வாங்கிவிடுவார்கள். Elegant lifestyle & dialogue நிறைந்திருக்கும். செலவு! அதைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள். இந்த வெப் சீரிஸில் ஒரு கப்பலையே கொண்டுவந்து கரையில் மோதி நிறுத்தியிருக்கிறார்கள் என்றால் பாருங்கள்! Quality-யில் எந்த compromise-ம் செய்துகொள்ளாத super material-தான் இந்த ஃபார்ஸி. முதலில் இந்த வெப் சீரிஸின் கதையைப் பார்த்துவிடலாம்


சன்னி என்ற சந்தீப் ஓர் ஓவியன். சில ஓவியர்கள் landscape வரைவார்கள்; சிலர் portraits வரைவார்கள்; சிலர் still life வரைவார்கள்; சிலர் modern art வரைவார்கள்; சிலர் oil paint; சிலர் water colour; சிலர் sketch. ஆனால், சன்னி எல்லா ஓவியங்களையும் சிறப்பாக வரைவான்.

சன்னிக்கு அப்பா அம்மா இல்லை. தாத்தா மாதவ் என்பவரிடம் வளர்கிறான். அவரும் ஓர் ஓவியர். Kranti (Revolution) என்னும் பத்திரிகையை நடத்தி வருகிறார். பத்திரிகையின் விற்பனை குறைந்து நொடிந்து போயிருக்கிறார்கள். கொடுத்த கடனைக் திருப்பிக்கொடுக்கவில்லை என்பதால் க்ராந்தி பத்திரிகை அச்சுக்கூடத்தை எடுத்துக்கொள்ளப் போவதாகக் கடன்காரர்கள் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கஷ்டம் தாங்க முடியாமல், “Tax-ஐ ஓடிப்போய்க் கட்றோம். சீட்டுக் கட்டிக் காசு சேகரிக்கிறோம். கிரிடெட் கார்ட தேய்ச்சு தினந்தோறும் செலவை ஓட்டிர்றோம். பணத்துக்கு மறுபடியும் கடன் வாங்குறோம். அப்புறம் அந்தப் பணத்தைக் கட்டுறதுக்கு மீட்டர் வட்டி வாங்குறோம். இந்த சிஸ்டத்தை பணக்காரன் அவன் வசதிக்கு ஏத்தமாதிரி உருவாக்கிக்கிட்டான். கஷ்டப்படுறவங்கதான் மெஜாரிட்டியா இருக்கோம். இங்க நமக்காக யோசிக்கிறதுக்கு யாரும் இல்லை. நாம் எல்லாம் middle class இல்லை! Middle finger class!”  எனப் புலம்பிக்கொண்டிருக்கிறான் சன்னி.

என்ன புலம்பி என்ன ஆகப் போகிறது. க்ராந்தி பத்திரிகையை மூடுவதற்கு நாள் குறித்துவிடுகிறார்கள். தன்னுடைய தாத்தா இருக்கும் வரைக்கும் இந்த க்ராந்தி பத்திரிகை உயிரோடு இருக்க வேண்டும். எப்பாடு பட்டாவது அதைக் காப்பாற்ற வேண்டும் என சன்னியும் அவன் நண்பன் ஃபைஸலும் போராடுகிறார்கள். கடன்காரர்களிடம் கெஞ்சிக் கேட்டு ஒரு மாதம் கால அவகாசம் வாங்குகிறார்கள்.

ஒரே மாதத்தில் வானம் பிளந்து கொட்டப் போகிறதா என்ன? சன்னியின் நண்பன் ஃபைஸல் குறுக்கு வழியை யோசிக்கிறான். அவனுக்கு அனீஸ் என்று ஒரு நண்பன் இருக்கிறான். அவன் இரண்டாம் நம்பர் வேலை செய்வதில் கில்லாடி. அவன்மூலம் மாஞ்சா பாய் அறிமுகம் ஆகிறான். சந்தையில் எந்தப் பொருள் விற்பனைக்கு வந்தாலும், அதைப் போல ஒரு duplicate பொருள் தயாரித்து விற்பவன். அவனிடம் சன்னியை அறிமுகப்படுத்துகிறார்கள்.

சன்னி நல்ல ஆர்ட்டிஸ்ட். அவன், “Duplicate பொருளைத் தயாரித்து, அதன்மூலம் பணம் சம்பாதிப்பதைவிட, நேரடியாகப் பணத்தையே duplicate-ஆ தயாரிச்சிட்டா என்ன? இந்தப் பணத்தையும் மனுசன்தான design பண்ணிருக்கான். அதை நாம பண்ணக் கூடாதா?” என நண்பனிடம் கேட்கிறான்.

புதிய 500, 2000 ரூபாய்த் தாள்களில் (கதை 2017-2018 காலகட்டத்தில் நடப்பதாக கொள்ளவேண்டும்) இருக்கும் விசயங்களை ஆராய்கிறார்கள். நடுவில் காந்தியடிகளின் படம். ஓரத்தில் electrotype water mark, ஒரு colour shifting security thread. ரூபாய்த் தாளின் வலது பக்கத்தில் emboss செய்யப்பட்ட 500 denomination. கோடுகள் மற்றும் விபரங்களின் மேல் பக்கத்தில் Bharath India என்ற micro எழுத்துகள் இருக்கின்றன. கோடுகளுக்கு நடுவில் super impose ஆகியிருக்கும் moire effect-கள் இருக்கின்றன. ஒரு விலையுயர்ந்த high class scanner-ஆல் கூட ரூபாய்த் தாளை மிகச் சரியாகப் படியெடுக்க முடியாது. இதற்கு ஓர் ஆர்ட்டிஸ்ட்தான் தேவை என்பதை உணர்கிறான் சன்னி.

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் தாள் கிடைப்பது கடினம். அதனால் 45gsm அளவுள்ள இரண்டு தாள்களை எடுத்து, அச்சடித்து ஒட்டுகிறார்கள். இதற்கு sandwich note என்று பெயர். அசல் ரூபாய்த் தாளைப் போல இருக்கும் கள்ளப்பணம் கிடைத்துவிடுகிறது. (Farzi என்றால் fake என்று பொருள்).

சன்னிக்குத் திருட்டுத்தனம் என்பது ஆரம்பத்தில் தேவையாக இருக்கிறது. பிறகு அதுவே ஒரு போதையாக மாறுகிறது. ”இதை செய்யறதுக்கு எனக்குக் காரணமே வேணாம். எனக்குப் புடிச்சிருக்கு நான் செய்யறேன்” என்கிறான். பேப்பர் குடோனிலிருந்து ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்குத் தேவையான தாள்களைத் திருடுகிறான். முதல் கட்டமாக 20 கோடி ருபாய் அச்சடித்து குஜராத்தில் இருக்கும் ஒரு MLA-க்கு டெலிவரி



எந்திரத்தாலும் கண்டுபிடிக்கமுடியாது. அதனால் இதனை Super note என்கிறார்கள்.

பணத்தை அச்சடித்தாயிற்று, இப்போது அவற்றை இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டுமே? அதுதான் இருப்பதிலேயே மிகப் பெரிய கஷ்டம். முதல் முறை அதற்காக முயற்சி செய்யும்போது மன்சூரின் கூட்டாளி, பிலால் என்பவன் மாட்டிக்கொள்கிறான். அவனைக் கைது செய்த மைக்கேல், அவன்மூலமாக மன்சூரின் நெர்வொர்க்கை எல்லாம் தெரிந்துகொள்கிறார்.

சன்னி ஒரு coffee shop-இல் வைத்து மேகாவைச் சந்திக்கிறான். இந்தச் சந்திப்பு மெல்ல வளர்ந்து காதலாகிறது.  அவளுடைய மொபைலில் ஒரு tracker-ஐ install செய்கிறான். அதன்மூலம் CCFART படையினர் என்ன என்ன செய்கிறார்கள் என்பது சன்னிக்குத் தெரிந்துவிடும். மன்சூர் கூட்டத்திலிருந்து ஒருவன் கொடுக்கும் தகவல் CCFART படையினருக்கு உதவியாக இருக்கிறது. ஒருவர் பணத்தை எடுத்துவர முயற்சி செய்வதும், இன்னொருவர் அவர்களைப் பிடிக்க முயற்சி செய்வதுமான cat and mouse விளையாட்டு மிகச் சுவையான காட்சிகள்.

இறுதியாக Trojan Horse என்ற முறைப்படி 12000 கோடி பணத்தை இந்தியாவிற்குக் கொண்டுவந்துவிடுவார்கள். இப்போது இறங்கியிருப்பது கள்ளப்பணம் இல்லை, Super note. எந்திரத்தால்கூட இந்தப் பணத்தைக் கண்டுபிடிக்கமுடியாது. நல்ல பணத்தையும் இந்தக் கள்ளப்பணத்தையும் எரித்தால் நல்ல பணம் கொஞ்சம் மஞ்சலாக எரியும். கள்ளப்பணம் சிவப்பாக எரியும். இப்படித்தான் கண்டுபிடிக்க முடியும்!

மன்சூரிடம் இருப்பது ஒரு புத்திசாலியான ஆர்ட்டிஸ்ட் என்பது  CCFART படையினருக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால், சன்னிதான் அந்தக் கள்ளப்பணத்தை உருவாக்கிய ஆர்ட்டிஸ்ட் என்பது மேகாவுக்குத் தெரியாது. இருவரும் ஒருநாள் நெருக்கமாகிறார்கள். அப்போது மேகா சன்னியிடம் “ஒரு counterfeiter தன்னைத்தானே ஆர்ட்டிஸ்ட்’ன்னு நினைக்க ஆரம்பிச்சா, அவன் rules-ஐ break பண்ணுவான். அவன் art-ல ஒரு impression-ஐ உருவாக்கப் பார்ப்பான். அதாவது ஒரு signature மாதிரி, அப்புறம் அந்த obsession-ல என்னைக்காச்சும் ஒரு நாள் மாட்டிக்குவான்” என்று சொல்கிறாள்.

இருவருக்குள்ளும் கலவி முடிந்த அடுத்த நாள், முன்பு தான் ஒரு ஹோட்டலில் கைப்பற்றிய sandwich note-ஐயும் , தற்போது பிடிப்பட்ட supernote-ஐயும் நன்கு கவனித்துப் பார்க்கிறாள். அதில் ஓரிடத்தில் S என்ற குறியீடு இருக்கிறது. சந்தீப் (சன்னி) வேண்டுமென்றே அதை விட்டு வைத்திருக்கிறான். இரண்டு நோட்டுகளையும் டிசைன் செய்தவன் ஒரே ஆள்தான் என்பது தெரியவருகிறது. ஆர்டிஸ்ட்டைச் சுற்றி வளைத்துத் தேட ஆரம்பிக்கிறார்கள்



கொடுத்திருக்கிறார். நான் இந்தியிலும் தமிழிலும் பார்த்துவிட்டேன். ஷாகித்துக்கு அவருடைய குரலைவிட நடிகர் ஜீவாவின் குரல் கனக் கச்சிதமாக இருக்கிறது. ராசி கன்னாவுக்கு ஐஸ்வர்யா பாஸ்கர் குரல் இனிமையாகப் பொருந்துகிறது. இவருடைய குரலைப் பல தமிழ் வெப் சீரிஸில் கேட்டுவிட்டேன். இவர் நடிகர் எம். எஸ். பாஸ்கரின் மகள் என்பது கூடுதல் தகவல். இந்த சீரிஸின் டப்பிங் பார்த்து நான் மிரண்டுபோன விசயம். தமிழ் டப்பிங்கில் விஜய் சேதுபதிக்காக TSK என்னும் திருச்சி சரவணக் குமார் குரல் கொடுத்திருக்கிறார். அச்சு அசல் விஜய் சேதுபதியின் குரல். இவர் சமீபத்தில் வந்த லப்பர் பந்து படத்தில் வெங்கடேஷ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படியாக, நல்ல விசயங்கள் இருந்தாலும், குறைகளும், நம்ப முடியாத காட்சிகளும், தேவையில்லாத காட்சிகளும் நிறையவே இருக்கும். உதாரணத்திற்கு, மைக்கேலுக்கும் அவர் மனைவிக்கும் இடையே நடக்கும் பிரச்சனை கதைக்குத் தேவையே இல்லாத ஆணி. இந்தப் பகுதிகள் இல்லாமல்கூட இந்த வெப் சீரிஸை சிறப்பாக எடுத்திருக்கமுடியும்.

அதேபோல,  ஏமன் நாட்டில் ஒளிந்திருக்கும் மன்சூர்கூட ஆர்டிஸ்டை ஒரே நாளில் கண்டுபிடித்துவிடுகிறான். ஆனால், இவ்வளவு பெரிய இராணுவ, போலிஸ் பட்டாளத்தை வைத்திருக்கும் இந்தியாவில் ஓர் ஆர்ட்டிஸ்டை கண்டுபிடிக்க அவ்வளவு பிரயத்தனப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்தக் கதைக்கு மன்சூர் ஆர்ட்டிஸ்டைக் கொல்ல முயற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. கதைப்படி கடைசியில் 12000 கோடி கள்ளப்பணத்தை எரிக்க வேண்டும். அதற்காக, வேண்டுமென்றே காட்சிகளை வளைத்திருக்கிறார்கள்.

இந்த வெப் சீரிஸில், தி ஃபேமிலி மேன் காட்சியைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து இணைத்திருக்கிறார்கள்; Breaking bad வெப் சீரிஸின் கதைப் போக்கை உள்வாங்கிக் கள்ளப்பணம் அச்சடிக்கும் காட்சிகளாக உருமாற்றியிருக்கிறார்கள். “Night Manager, Criminal Justice, Hostage போன்ற பல தொடர்களின் சாயல்களைக் கலந்திருக்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டும் உண்டு. 2014-இல் சினிமாவாக எடுக்க முயற்சி செய்து, பிறகு வெப் சீரிஸாக மாற்றவேண்டிய தேவை வந்ததால் கிடைத்த இடத்திலிருந்தெல்லாம் உருவியிருக்கிறார்கள் போல!


இப்படி தேவையில்லாத கதைகளும், காட்சிகளும் இருந்தாலும்கூட; எத்தனையோ படங்களிலிருந்து கதைக்களத்தையும், காட்சிகளையும் சுட்டாலும்கூட, இந்த வெப் சீரிஸ் ஒரு superb entertainer crime drama thriller என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சமீபத்தில் மிகப் பெரிய நடிகர் நடித்து தமிழில் வந்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாவற்றையும்விட ஃபார்ஸி மிகச் சிறப்பாக இருக்கிறது.

சென்ற மாதம் லக்கி பாஸ்கர் என்ற படம் வந்தது. எந்த ஆரவாரமும் இல்லாமல் Pan India படமாக மாறி, பல கோடிகளைச் சம்பாதித்துள்ளது. இதற்கும் அந்தப் படம் புதிய கதை எல்லாம் இல்லை. Scam 1992 என்ற வெப் சீரிஸை தோசையைத் திருப்பிப் போடுவதுபோல போட்டு, அத்தனை கோடிகளைச் சம்பாதித்துவிட்டார்கள். இதைப் போல, பணத்தைக் கொள்ளையடிப்பது அல்லது குறுக்கு வழிகளில் சம்பாதிக்கும் கதைக்களங்களைக் கொண்ட Money Heist, Breaking bad, Lupin, Narcos போன்ற வெப் சீரிஸ்கள் எல்லாம் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. காரணம் இளைஞர்கள்தான்.

வாழ்க்கையில் பணமே பிரதானம் என்பதை இளைஞர்கள் அன்றாடம் அனுபவிக்கிறார்கள். வாழ்வியல் ஒழுங்கு பற்றிய போதனைகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சிறுக சிறுகச் சேர்த்து வைத்துப் பணக்காரன் ஆவது எல்லாம் பழங்கதையாகிப் போனது. ஏதாவது பெரிய சம்பவம் பண்ணாமல் பணக்காரனாவது கடினம் என்பதை அறிந்துகொண்டார்கள். திரையில் ஒருவன் மிகப் பெரிய scam செய்து சம்பாதிப்பதைப் பார்க்கும்போது, தாங்களே அந்த வெற்றியை அடைந்துவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு நேர்மை பற்றி எந்த விருப்பமும் இல்லை. அவர்கள் கவலை எல்லாம் புத்திசாலித்தனமாகத் தப்பு செய்வது எப்படி என்பது மட்டும்தான். அந்த வித்தை மட்டும் தெரிந்துவிட்டால், பிரதமரே இறங்கி வந்து வணக்கம் வைப்பார். ஒரு நல்ல டீல் பேசி நாட்டையே கொள்ளையடிக்க வழி செய்துகொடுப்பார். வங்கிகளில் இருக்கும் பணம், LIC-யில் இருக்கும் பணம் எல்லாவற்றையும் எடுத்து நம் காலடியில் கொட்டுவார். அமெரிக்கா என்ன? ஆண்டவனே பிடி வாரண்ட் அனுப்பினாலும் கவலைப்படத் தேவையில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்!

https://uyirmmai.com/article/uyirmmai-december-2024-sankar-doss-article-03/


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The Railway Men- The Untold Story of Bhopal 1984 : காங்கிரஸைக் குறிவைக்கும் கதைக்களங்கள் - சங்கர்தாஸ்

DAHAAD இராஜஸ்தான் சிங்கப் பெண்ணின் சமூக நீதி கர்ஜனை! - சங்கர்தாஸ்

PAATAL LOK ஜனநாயகத்தின்மீது நடத்தப்படும் என்கவுண்டர் – சங்கர் தாஸ்